இயான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
இயான் புயலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
அமெரிக்காவை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயான் புயலால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், இதயப்பூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இந்த கடினமான காலங்களில் அமெரிக்க மக்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது.
தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.புளோரிடாவில் சனிக்கிழமை இரவு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
புளோரிடாவில் மட்டும் புயல் காரணமாக குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாகவும், வடக்கு கரோலினாவில் புயல் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.