பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லி ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.;
புதுடெல்லி,
அண்டை நாடான நேபாளம், இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் என 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இதில் பிரச்சினைகளும் இருந்து வருகின்றன. ஆனால், நேபாளம், பொருட்கள் மற்றும் சேவைகள் போக்குவரத்துக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது.
இந்த நிலையில் நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா (வயது 68) 4 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் பதவி ஏற்ற பின்னர், இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை. அவரை மத்திய மந்திரி மீனாட்சி லேகி வரவேற்றார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இரு நாடுகள் இடையேயான கூட்டை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு எடுத்துச்செல்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் 7 ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்தாகின.
பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் இந்தியாவின் ரூபாய் திஹாவிலும், நேபாளத்தின் நேபாள்கஞ்சிலும் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளை காணொலிக்காட்சி வழியாக திறந்து வைத்தனர். மேலும் பீகாரின் பாட்னஹாவில் இருந்து நேபாளத்தின் புத்தாநகரில் உள்ள கஸ்டம் யார்டுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்தையும் காணொலிக்காட்சி வழியாக பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
இமாலய உயரத்தில் உறவு
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
நாங்கள் இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதே உணர்வுடன் நாங்கள், அது எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்.
கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். (ராமாயண சுற்று என்பது மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுவதேஷ் தர்ஷண் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட 15 சுற்றுகளில் ஒன்று). என்று அவர் கூறினார்.