கடவுள் துர்கா சிலை கரைக்க சென்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் வெள்ளம்; 8 பேர் பலி; பரபரப்பு வீடியோ
கடவுள் துர்கா சிலை கரைக்க சென்றபோது ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
கொல்கத்தா,
இந்து மத பண்டிகையான நவராத்திரி வட இந்தியாவில் வெகுவாக கொண்டாடப்பட்டது. நவராத்தியின் ஒரு பகுதியாக துர்கா பூஜை பண்டிகையும் கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பண்டிகை மேற்குவங்காள மாநிலத்தில் விமர்சையாக கொண்டாடப்படும். துர்கா பூஜையின் போது பல இடங்களில் கடவுள் துர்கா அம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பின்னர் கடவுள் துர்கா சிலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
அந்த வகையில், மேற்குவங்காளத்தின் ஜல்பைகுரி பகுதியில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலையை ஆற்றில் கரைக்க அதே பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று இரவு அருகில் உள்ள ஆற்றுக்கு கொண்டு சென்றனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள மல் ஆற்றில் கடவுள் துர்கா சிலையை கரைக்க மக்கள் ஆற்றுக்குள் இறக்கியுள்ளனர். ஆற்றில் குறைவாக தண்ணீர் இருந்த நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், துர்கா சிலையை கரைக்க ஆற்றில் இறங்கி இருந்த மக்கள் பலர் அடித்துச்செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட சிலரை உயிருடன் மீட்டனர். ஆனாலும் இந்த சம்பவத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 8 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடவுள் துர்கா சிலையை கரைக்க சென்றபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிவாரணம் அறிவித்துள்ளனர்.
அதன்படி, உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மற்றும் முதல்-மந்திரி தனித்தனியே அறிவித்துள்ளனர். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.