ஜூலை மாதத்தில் 600 கோடி யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!

ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் ஜூலையில் நடந்துள்ளன.;

Update: 2022-08-02 13:11 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் 6.28 பில்லியன் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி - யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச பரிவர்த்தனை ஜூலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.10.62 டிரில்லியன்(ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகம்) மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ஜூன் மாதத்தை விட ஜூலையில் செய்யப்பட்ட பரிவர்த்தனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022 நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது, அதாவது அதன் மதிப்பு ரூ. 84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜூலை மாதத்தில் 600 கோடி (6 பில்லியனை) தாண்டிய டிஜிட்டல் யுபிஐ பரிவர்த்தனைகளின் சாதனையை பிரதமர் மோடி பாராட்டினார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"இது ஒரு சிறந்த சாதனை. இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இந்திய மக்களின் கூட்டு உறுதியைக் குறிக்கிறது. இது பொருளாதாரத்தை தூய்மையாக்க விரும்பும் மக்களின் ஒன்றுபட்ட உறுதியைக் குறிக்கிறது.

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின்போது, டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகள் குறிப்பிடும்படியாக உதவியாக இருந்தன" என்று கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு நாளைக்கு 100 கோடி(ஒரு பில்லியன்) பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதே இலக்கு என யுபிஐ நிர்ணயித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்