மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானையை காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானையை காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-18 21:19 GMT

மின்வேலியில் சிக்கிய யானை

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால், அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், காட்டு யானைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற தனது தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு தேடி வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த விவசாயியின் ேதாட்டத்துக்குள் செல்ல முயன்றது. அப்போது அந்த யானை, மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது.

இதனை அறிந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக பந்திப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

உயிர் பிழைத்தது

பின்னர் பந்திப்பூர் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு அதேப்பகுதியில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவ குழுவினரின் 10 மணி நேர தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த காட்டு யானை உயிர் பிழைத்தது. பின்னர் வனத்துறையினர் அந்த யானைக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினர். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மேலும் அந்த யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கும், மருத்துவ குழுவினருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி பாராட்டு

இந்த நிலையில், காட்டு யானையின் உயிரை காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினரையும், மருத்துவ குழுவினரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் படத்தை பதிவிட்டு, "இதனை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகள். நம்முடைய மக்கள் இத்தகைய பரிவு காட்டுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்று கூறி இருந்தார்.

மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் தனது டுவிட்டர் பதிவில், "பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்கள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் மின்சாரம் தாக்கிய யானை காப்பாற்றப்பட்டது என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்