ஜி-20 மாநாட்டுக்கு வரும்படி எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தரும்படி எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.;
கெய்ரோ,
பிரதமர் மோடியின் 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், அவர் எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அவர் எகிப்தில் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணம் பற்றி, மத்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
எகிப்து நாட்டுக்கான பிரதமர் மோடியின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். நேற்று மதியம் எகிப்து சென்றடைந்த அவரை, விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் உற்சாகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு உள்பட சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதன்பின்பு, பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் சிசி, ஆர்டர் ஆப் தி நைல் என்ற விருது வழங்கி இன்று கவுரவித்து உள்ளார். இது எகிப்து நாட்டின் மிக உயரிய விருது ஆகும். இரு நாடுகளுக்கும் மற்றும் இரு சமூக மக்களுக்கும் இடையேயான ஆழ வேரூன்றிய நட்புறவு என்ற இரு முக்கிய விசயங்களை இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பயணத்தின்போது, வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வரும்படி எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவர் தெரிவித்து உள்ளார்.