ஜி20 மாநாடு குறித்து 40 கட்சி தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 மாநாடு தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் பங்கேற்றனர்.;

Update: 2022-12-06 00:29 GMT

புதுடெல்லி,

உலகின் முக்கியமான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினராக கொண்ட அமைப்பு, 'ஜி20'.

தலைமையேற்ற இந்தியா

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா, தென்அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

இதைத்தவிர உலக வர்த்தகத்தில் 75 சதவீத பங்களிப்பையும் கொண்டிருப்பதால், 'ஜி20' அமைப்பு சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த முக்கிய அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு தற்போது கிடைத்து உள்ளது. இந்த கவுரவமிக்க பதவியை கடந்த 1-ந்தேதி முதல் இந்தியா அலங்கரித்து வருகிறது.

'ஜி20' உச்சி மாநாடு

இந்த நிலையில் ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இது தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்கு, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சி மாநாட்டில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200 கூட்டங்கள்

இந்த மாநாட்டை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் ஜி20 அமைப்பின் முக்கிய கூட்டங்களில் ஒன்றான 'ஷெர்பா' கூட்டம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், அதில் தாக்கல் செய்யப்படும் பிரகடனத்தில் சேர்ப்பதற்கான அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இதில் இந்தியா உள்படபல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

மறுபுறம் ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வகையில், அதற்கான திட்டமிடலுக்காக 200-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இதில் முக்கியமாக 'ஜி20' உச்சி மாநாடு தொடர்பாக நாட்டின் அரசியல் கட்சித்தலைவர்களின் ஆலோசனைகளை பெறவும், ஆலோசனை நடத்தி உத்திகளை இறுதிசெய்யவும் வசதியாக அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்காக நாட்டின் முக்கியமான 40 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷிகடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இதில் மத்திய அரசு சார்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இதைப்போல முதல்-மந்திரிகள் மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), நிதிஷ் குமார் (பீகார்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), நவீன் பட்நாயக் (ஒடிசா), ஏக்நாத் ஷிண்டே (மராட்டியம்), பிரேம்சிங் தமங் (சிக்கிம்) ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

மேலும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவருமான தேவேகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அப்னா தளம் சார்பில் அனுபிரியா படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இருந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜி20 அமைப்பில் இந்தியா சார்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து வெளிவிவகாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.க்கள் வரவேற்றனர்

முன்னதாக, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.30 மணிக்கு டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, ஏ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தமிழக அரசின் பொதிகை இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை அதிகாரிகளும், எம்.பி.க்களும் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்