பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் ஆஜராக குஜராத் கோர்ட்டு உத்தரவு
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.;
ஆமதாபாத்,
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் 26-ந்தேதி ஆஜராக குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கேட்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். மேலும் மனு தாக்கல் செய்த கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பிரதமரின் பட்டம் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்து கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டனர்.
நேரில் ஆஜராகவில்லை
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் குஜராத் பல்கலைக்கழக பதிவாளர், ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் இருவரும் ஜூலை 13-ந்தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் நேற்று அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.
டெல்லியில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் கெஜ்ரிவால் அங்கேயே இருக்க வேண்டும் என்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார்.
26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் நாயரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் வழக்கின் விசாரணை தாமதம் அடைவதால், அடுத்த விசாரணைக்கு அவர்கள் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தினார்.
கெஜ்ரிவால் தரப்பினரின் இந்த விலக்கு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.ஜே.பஞ்சால், இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக, பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பாக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு குஜராத் ஐகோர்ட்டின் விசாரணையில் இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் கோர்ட்டில் முறையிட்டார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக வக்கீல், அந்த வழக்குக்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனக்கூறினார்.