"கைத்தடியாக காட்சிப்படுத்தப்பட்டது" - செங்கோல் விவகாரத்தில் காங்கிரசை தாக்கிய பிரதமர் மோடி
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். டெல்லியில் நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.
இந்த சூழலில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஆதீனங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்த செங்கோல் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
இந்தியா எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துவார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆன்மீகம் பலம் என்று நான் நம்புகிறேன். இது எல்லா சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும்.
சுதந்திரத்திற்குப் பிறகு புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவியை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த பவனில் கைத்தடியாக (வாக்கிங் ஸ்டிக்) வைக்கப்பட்டு இருந்தது. உங்கள் 'சேவகரும்' எங்கள் அரசாங்கமும் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்" என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 60 மத தலைவர்கள் அழைக்கப்பட்டனர், அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் ஆதீனங்கள், மடங்கள் உயர் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த வரலாற்றைக் கொண்டுள்ளன, மேலும் மதத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் பெயர் பெற்றவை. அவர்களில் பலர் பல நூறு ஆண்டுகள் பழமையானவர்கள்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு முதன்முதலில் பெற்ற செங்கோல், இதுவரை அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்பட உள்ளது.