குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு...!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-01 11:59 GMT

Image Courtesy: PTI

காந்திநகர்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.

இதனிடையே, சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த அனைவரும் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த கோர விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 135 பேரை பலி வாங்கிய குஜராத்தின் மோர்பி நகர பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து நடந்த பாலத்தின் மீது ஏறி பிரதமர் மோடி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மேலும், விபத்தில் மச்சு ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பணிகளையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், இந்த பாலம் விபத்தில் படுகாயமடைந்து சிக்சிசை பெற்றுவருபவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். பாலம் ஆய்வு பணியின் போது பிரதமர் மோடியுடன் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்