காது கேளாதோருக்கான டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

இதில் இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

Update: 2022-05-21 13:40 GMT

புதுடெல்லி,

பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக்(டெப்லிம்பிக்ஸ்) போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற பிரேசிலில் நடைபெற்ற டெப்லிம்பிக்ஸ் போட்டிகளில், 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி, 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில், டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு புகழும் பெருமையையும் கொண்டு வந்த நமது சாம்பியன்களுடனான உரையாடலை என்னால் மறக்க முடியாது.

விளையாட்டு வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் உள்ள ஆர்வத்தையும் உறுதியையும் என்னால் காண முடிந்தது.

அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்