மீண்டும் வங்காளதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா - தொலைபேசியில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

வங்களாதேசம் மற்றும் அதன் மக்களை மையமாக கொண்ட கூட்டாண்மையை வலுப்படுத்த ஈடுபாடு கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-01-08 14:48 GMT

புதுடெல்லி,

வங்காளதேச நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின.

வாக்கு எண்ணிக்கையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதன்படி வங்காளதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்காளதேச மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வங்களாதேசம் மற்றும் அதன் மக்களை மையமாக கொண்ட கூட்டாண்மையை வலுப்படுத்த ஈடுபாடு கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்