இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது ஆபாச புகைப்படங்களை பரிமாறி உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர், மாணவியின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று அவரை பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் மாணவியின் ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து வாலிபரின் நண்பர்களும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்ததை தொடர்ந்து மாணவி பயந்து பள்ளிக்கு செல்லவில்லை. இதனால், மாணவியை அவரது பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியுடன் ஒன்றாகப் படித்து வந்த மாணவர்கள் உள்பட 18 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியில் படித்து வரும் 4 மாணவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-1 மாணவியை மிரட்டி 18 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.