மாடால் விருபாக்ஷப்பா மீதான லஞ்ச வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய பொதுநல மனு தள்ளுபடி
மாடால் விருபாக்ஷப்பா மீதான லஞ்ச வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
ரூ.40 லட்சம் லஞ்சம்
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடால் விருபாக்ஷப்பா. பா.ஜனதாவை சேர்ந்த இவர் மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் வாரிய தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மகன் பிரசாந்த். இவர் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைமை அதிகாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சோப்பு தயாரிப்பிற்கு ரசாயன பொருட்கள் வாங்குவது தொடர்பான டெண்டர்கள் கோரப்பட்டது. அப்போது டெண்டர் ஒதுக்குவதற்கு, பிரசாந்த் ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் காண்டிராக்டர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெறும்போது லோக் அயுக்தா போலீசாரால் கையும், களவுமாக பிரசாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவானார். லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாடால் விருபாக்ஷப்பாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் ரத்து
மேலும் லோக் அயுக்தா விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜரான மாடால் விருபாக்ஷப்பா, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு லஞ்சம் பெற்ற வழக்கில் மாடால் விருபாக்ஷப்பாவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் தலைமறைவானார். லோக் அயுக்தா போலீசாரும் அவரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே பெங்களூருவுக்கு காரில் வரும் வழியில் மாடால் விருபாக்ஷப்பா கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் லஞ்ச வழக்கு தொடர்பாக மாடால் விருபாக்ஷப்பாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையை மாற்ற முடியாது
இதற்கிடையே மாடால் விருபாக்ஷப்பா தொடர்பான லஞ்ச வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது நீதிபதி பிரசன்னா கூறுகையில், 'லோக் அயுக்தா போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்து சமர்ப்பிக்குமாறும், அது இல்லை என்பதால் மாடால் விருபாக்ஷப்பா மீதான லஞ்ச வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என்றும் கூறினார். மேலும் அதுதொடர்பான பொதுநல மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.