கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி

சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.;

Update: 2024-05-08 10:16 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திகார் சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், ஊடகங்களில் கெஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் அரவிந்த கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும், கெஜ்ரிவாலை பதவி விலகுமாறு டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா ஆர்ப்பாட்டம் அல்லது அறிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கருத்துக்களுக்கு எவ்வாறு தடை விதிக்க முடியும்? இதற்காக எமர்ஜென்சி அல்லது ராணுவ சட்டத்தை அமல்படுத்த வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த மனு பொதுநல மனுவாகாது என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்