கர்நாடக சட்டசபையில் வீரசாவர்க்கர், விவேகானந்தர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் திறப்பு
கர்நாடக சட்டசபையில் வீரசாவர்க்கர், விவேகானந்தர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டன. இது ஒரு தலைப்பட்சமான முடிவு என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் வீரசாவர்க்கர், விவேகானந்தர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டன. இது ஒரு தலைப்பட்சமான முடிவு என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளிர்கால கூட்டத்தொடர்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது. கவர்னர் உரைக்கான இருசபைகளின் கூட்டு கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது வாடிக்கை. அதன்படி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் 19-ந் தேதி (அதாவது நேற்று) பெலகாவியில் தொடங்கும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் தொடங்கியது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
வீரசாவர்க்கர் படம் திறப்பு
அதற்கு முன்னதாக தலைவா்களின் படங்கள் திறப்பு விழா சபை அரங்கில் நடைபெற்றது.அதாவது சட்டசபை அரங்கத்தில் புதிதாக நேதாஜி, அம்பேத்கர், பசவண்ணர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், வீரசாவர்க்கர், சுவாமி விவேகானந்தர் ஆகிய தலைவர்களின் முழு உருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சபாநாயகர் காகேரி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் தலைவர்களின் படங்களை திறந்து வைத்தனர். இதில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட மந்திரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
இந்த விழாவில் பங்கேற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் சுவர்ண விதான சவுதாவின் முன் பகுதியில் அமர்ந்து, தேசிய மற்றும் கர்நாடக அளவில் உள்ள பிற தலைவர்கள் மற்றும் மகான்களின் படங்களையும் திறக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த வால்மீகி, கனகதாசர் உள்பட தலைவர்கள் மற்றும் மகான்களின் படங்களையும் சட்டசபையில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களின் கைகளில் அந்த மகான்களின் படங்களை ஏந்தி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
யாருக்கும் எதிராக போராட்டம் நடத்தவில்லை
இதுகுறித்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் யாருடைய படத்திற்கு எதிராகவும் இங்கு தர்ணா நடத்தவில்லை. முன்கூட்டியே எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒரு தலைபட்சமாக முடிவு எடுத்து தலைவர்களின் படங்களை வைத்துள்ளனர். நாங்கள் எந்த தலைவரின் படத்திற்கு எதிராகவும் தா்ணா நடத்தவில்லை.
ஆனால் தலைவர்களின் படங்களை இங்கு வைப்பதாக இருந்தால் சபையில் அனைவரின் நம்பிக்கையும் பெற வேண்டும். ஏனென்றால் அது சபையின் சொத்து. சபாநாயகர் இந்த சபையின் பாதுகாவலர் என்றாலும், அவர் இதை செய்யவில்லை. சபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் கூட இதுபற்றி விவாதிக்கவில்லை. தலைவர்களின் பட திறப்பு விழா குறித்து எனக்கு அழைப்பு வரவில்லை. ஊடகங்கள் மூலமாக இதை நான் தெரிந்து கொண்டேன்.
சமூக சீர்திருத்தவாதிகள்
நேரு, ஜெகஜீவன் ராம் மற்றும் கனகதாசர், வால்மீகி போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் படங்களையும் வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. நாங்கள் ஊழல், வாக்காளர் பட்டியல் முறைகேடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பிரச்சினை கிளப்ப உள்ளோம். இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்து தலைவர்களின் படங்களை வைத்துள்ளனர்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இருப்பினும் வீரசாவர்க்கரின் படத்தை சட்டசபையில் திறந்ததால் தான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரங்கல் தீர்மானம்
இதையடுத்து சட்டசபையின் முதல்நாள் கூட்டத்தில், மறைந்த சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி உள்பட முன்னாள், உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
மராட்டியம் பெலகாவியை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் பெலகாவி கர்நாடகத்தின் ஒரு பகுதி என்பதை நிலைநிறுத்த அங்கு சுவர்ண விதான சவுதா கட்டப்பட்டு ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர் அங்கு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.