பெட்ரோலுக்கு காசு கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் கார் ஏற்றி கொலை
உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட, ஊழியர் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.;
ஷிகோஹாபாத்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட, பெட்ரோல் பங்க் ஊழியர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஷிகோஹாபாத் பகுதியில் நேற்று நடந்துள்ளது.
நேற்று இரவு 10.30 மணியளவில், 4 பேர் காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த ஷேர் சிங் (வயது 50) என்பவர் காருக்கு ரூ.1,020 மதிப்புள்ள பெட்ரோலை நிரப்பினார். காரில் இருந்தவர்களிடம் பெட்ரோலுக்கு பணம் செலுத்துமாறு ஷேர் சிங் கேட்டபோது, அவர்கள் பணம் செலுத்தாமல் தப்பியோட முயன்றுள்ளனர்.
இதையடுத்து காரைப் பின்தொடர்ந்து ஷேர் சிங் ஓடியதில், அவர் மீது கார் ஏறி பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.