சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய மந்திரி விளக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2023-06-10 19:57 GMT

பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருக்கிறது, இந்தியா.

சர்வதேச சந்தை விலை

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் உடனடியாக எதிரொலித்து வருகிறது. சர்வதேச சந்தை விலை அடிப்படையில் இங்குள்ள எண்ணெய் நிறுவனங்களும் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினசரி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

விலையில் மாற்றம் இல்லை

இந்தியாவில் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு விலையில் எந்த மாற்றமும் இல்லை.

உக்ரைன் போர், சர்வதேச பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு காரணிகள் இருந்தபோதும் இந்த விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியே இதற்கு காரணமாக கூறப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் சரிவும், மிதமான ேபாக்கும் நீடித்து வருகிறது.

விலை குறைக்கப்படுமா?

எனவே இதை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக இந்த விலை குறைப்பு பயன்கள் நுகர்வோரை அடைய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படுகிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'தற்போது அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடும் நிலையில் நான் இல்லை' என தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்கள் மீட்சி

பின்னர் இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

அரசு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலாண்டில் சரியான நிலையில் இருந்தன. அவை இழந்த சிலவற்றை மீட்டெடுத்துள்ளன. அவர்கள் நல்ல கார்பரேட் குடிமக்களாக இருந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக என்ன செய்யலாம்? என்று பார்ப்போம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக இருப்பதுடன், அடுத்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களும் நன்றாக இருக்கும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விவகாரத்தை எண்ணெய் நிறுவனங்கள் கவனிக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் எண்ணெய் விலையில் உயர்வு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இதைப்போல நுகர்வோர் எந்த சிரமமும் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.

வாட் வரி குறைக்கவில்லை

ஒருவர் எல்லாவற்றையும் ''இலவசமாக'' கொடுக்க விரும்பலாம். ஆனால் அவர்கள் இலவச அரசியலின் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார்கள். விலை நிர்ணயம் என்பது ஒரு முக்கியமான விஷயம். மக்களுக்கு உதவ அரசு தனது 9 ஆண்டு காலத்தில் பல நல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பா.ஜனதா அல்லாத மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காமல் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்கின்றன. ஆனாலும் பெட்ரோல் விலை குறித்து அதிகம் குரல் கொடுக்கின்றன.

இவ்வாறு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்