புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
அஜ்ஜாம்புரா தாலுகாவில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகாவில் சிவனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் ஏற்கனவே மதுபான கடைகளும், மதுபான விடுதிகளும் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் தற்போது புதிதாக மதுபான கடை ஒன்றை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சேர்ந்து சிக்கமகளூரு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ரமேசிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் புதிதாக திறக்க இருக்கும் மதுபான கடை அருகில் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. எனவே அந்த மதுபான கடை திறக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூறப்பட்டு இருந்தது. அந்த கோரிக்கை மனுவை பெற்று கொண்ட கலெக்டா் ரமேஷ், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.