கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது ஆஜர்படுத்தியுள்ளனர். அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்ற சிறிது நேரத்திலேயே கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், எந்த அடிப்படையில் இன்னும் முதல்-மந்திரி பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு, டெல்லி அரசு, துணை நிலை கவர்னர் உள்ளிட்டோர் விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.