சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்ட கெஜ்ரிவால், தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திகார் சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ஊடக நிறுவனங்களில் கெஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரவிந்த கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து ஆட்சி செய்ய முதல்-மந்திரிக்கோ, பிரதமருக்கோ அரசமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.