நீங்கள் நடவடிக்கை எடுக்கும் நபர்கள் சக்தி வாய்ந்தவர்கள்: சி.பி.ஐ. வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு

நீங்கள் நடவடிக்கை எடுக்கும் நபர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என எனக்கு தெரியும் என்று சி.பி.ஐ. வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-04-03 08:27 GMT


புதுடெல்லி,


நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கிறது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசி வருகிறார்.

அவர் பேசும்போது, பொதுமக்களுக்கு நம்பிக்கையும், வலிமையையும் சி.பி.ஐ. அமைப்பு வழங்கி உள்ளது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மக்கள் நிர்பந்திக்கிறார்கள். நீதியின் ஒரு தனிப்பெரும் பெயராக சி.பி.ஐ. உருவெடுத்து உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் அதிக அளவில் ஊழல் செய்வதற்கான போட்டி இருந்தது. பெரிய பெரிய ஊழல்கள் நடந்தன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. ஏனெனில் அமைப்பு அவர்களது பக்கம் இருந்தது.

2014-ம் ஆண்டுக்கு பின்பு, ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக நாங்கள் ஒரு நடவடிக்கையை எடுத்தோம்.

நீங்கள் நடவடிக்கை எடுக்க கூடிய நபர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என எனக்கு தெரியும். அவர்கள் அரசு மற்றும் அமைப்பின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகின்றனர். இன்றளவும், சில மாநிலங்களில் அவர்கள் அதிகாரம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆனால், நீங்கள் (சி.பி.ஐ. அமைப்பு) உங்களது பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஊழல் செய்த ஒரு நபர் கூட தப்பி விட கூடாது என்று சி.பி.ஐ. வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ஷில்லாங் (மேகாலயா) மற்றும் புனே, நாக்பூர் (மராட்டியம்) ஆகிய நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட சி.பி.ஐ. அலுவலகங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சி.பி.ஐ.யின் வைரவிழாவை குறிக்கும் அஞ்சல் தலை, நினைவு நாணயம் ஆகியவற்றை வெளியிடுகிறார். சி.பி.ஐ.யின் 'டுவிட்டர்' கணக்கையும் தொடங்கி வைக்கிறார்.

சி.பி.ஐ.யில் சிறப்பாக பணிபுரிந்ததற்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் மற்றும் சிறந்த விசாரணை அதிகாரிகளுக்கான தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு அந்த பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கி அவர்களை கவுரவிக்க இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்