ஜெகதீஷ் ஷெட்டருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி

சுயநலத்திற்காக பா.ஜனதாவை விட்டு விலகிய ஜெகதீஷ் ஷெட்டருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா கூறினார்.

Update: 2023-04-18 22:27 GMT

பெங்களூரு:

மத்திய மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜெகதீஷ் ஷெட்டர்

எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு சென்றுள்ளார். அவர் கட்சி கொடியை மாற்றிய உடனேயே அவரின் கொள்கை மாறிவிடுமா?. கட்சியில் அவருக்கு என்ன பதவி கிடைக்கும்?. தேசிய கொள்கைகளை கொண்ட கட்சி பா.ஜனதா. நாட்டிற்கு அநீதி ஏற்படும்போது, நாடாளுமன்றத்தில் நமது குரல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜனசங்கம் தொடங்கப்பட்டது.

ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்தினர் ஜனசங்க காலத்தில் இருந்தே கட்சியில் உள்ளனர். வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்கள் உப்பள்ளிக்கு வரும்போது, அவரது இல்லத்தில் தான் தங்குவார்கள். வாழ்க்கை முழுவதும் காங்கிரசுக்கு எதிராக போராடிய ஜெகதீஷ் ஷெட்டர் இ்ன்று காங்கிரசில் சேர்ந்துள்ளார். பா.ஜனதாவின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அவர் எங்கு சறுக்கி விழுந்தார்?.

பதவிகளை அனுபவித்தார்

6 முறை எம்.எல்.ஏ., மந்திரி, முதல்-மந்திரி, கட்சியின் மாநில தலைவர் அனைத்து பதவிகளையும் ஜெகதீஷ் ஷெட்டர் அனுபவித்தார். ஒரு எம்.எல்.ஏ. பதவிக்காக இவ்வளவு பெரிய கட்சியை விட்டு வெளியேற அவருக்கு எப்படி மனது வந்தது?. சுயநலத்திற்காக பா.ஜனதாவை விட்டு விலகிய ஜெகதீஷ் ஷெட்டருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. அங்கு ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்