காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

கர்நாடகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-05-02 22:03 GMT

பெங்களூரு:-

உள்நாட்டு போர்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

நெருக்கடியான தருணத்தில் தான் நல்லவை, தீயவை எது என்று அடையாளம் காண முடிகிறது. நாடு சிக்கலில் இருக்கும் போதெல்லாம், அதிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் அரசியல் செய்கின்றன. சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகின்றன. குண்டுகள் போடப்படுகின்றன. அங்கு மக்கள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

அரசியல் செய்கிறார்கள்

அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு பகல்-இரவாக பணியாற்றி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்திலும் காங்கிரசார் அரசியல் செய்தனர். பல்வேறு குடும்பங்களை தூண்டிவிட முயற்சி செய்தனர். உக்ரைன் போராக இருந்தாலும் சரி, கொரோனா நெருக்கடியாக இருந்தாலும் சரி காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) பொய்களை பரப்பி அரசியல் செய்கிறார்கள். இதை மட்டுமே அவா்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வலுவான பா.ஜனதா, சூடானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகளை செய்து வருகிறது. கர்நாடகத்தின் பெருமைக்கு களங்கம் கற்பிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களையும், அவர்களின் பேச்சுகளையும் கவனியுங்கள்.

கண்ணியத்திற்கு களங்கம்

அவர்கள் கூறும் கருத்தால் நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்தது. ஒவ்வொரு குடிமக்களும் இதை கண்டு வெட்கப்பட்டார்கள். கர்நாடகத்தின் பெருமைக்கும், கண்ணியத்திற்கும் மரியாதை வழங்க எதிர்க்கட்சி தலைவர்கள் மறந்துவிட்டார்கள். தொடக்கத்தில் தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறங்கி பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அரசியலில் நீண்ட அனுபவம் இருந்தாலும், ஒரு குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்த என்னை(பிரதமர் மோடி) விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். அதன் பிறகு அவரது மகன்(பிரியங்க் கார்கே), என்னை விமர்சித்துள்ளார். நான் அந்த வார்த்தையை மீண்டும் பயன்படுத்த மாட்டேன். கர்நாடகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் மோடி பற்றி நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம். ஆனால் தேர்தலின் தரத்தை குறைக்க வேண்டாம். கர்நாடகத்தின் பரம்பரையை மதிக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்