பாஜகவுக்கு இமாச்சலபிரதேச மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் - காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா
இமாச்சலபிரதேச மக்கள் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இமாச்சலபிரதேச மக்கள் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவ பூமியான இமாச்சலபிரதேச மக்கள் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற செய்தியை பாஜகவுக்கு தந்துள்ளதாக கூறியுள்ளார்.
ராணுவத்தில் இணையவிருந்த இளைஞர்கள் வசித்து வரும் பகுதிகளில் பாஜகவுக்கு சரியான பதிலடி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஆனந்த் சர்மா, மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று இமாச்சலபிரதேச மக்கள் கருதுவதாக குறிபிட்டுள்ளார். இத்தகைய காரணங்களே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அவர் கூறியுள்ளார்.