எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது: கெஜ்ரிவால் உததரவு

டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.;

Update: 2023-03-23 09:35 GMT



புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நிலையில், அதற்கு பதிலடியாக பா.ஜ.க.வும் செயல்பட்டது.

அக்கட்சியின் டெல்லி தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா சார்பில் கெஜ்ரிவாலுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டிய விவகாரத்தில் டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 100-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய 6 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, பா.ஜ.க. சார்பிலான போஸ்டர்களில் கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் தென்பட்டன.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

ஜனநாயகத்தில், ஒரு தலைவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தங்களது பார்வைகளை வெளியிட பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. அதனால், எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது என கூறியுள்ளார்.

இதுபற்றி குறிப்பிட்ட கெஜ்ரிவால், சமூக ஊடகத்தில், கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள் என அவர்கள் எழுதியிருந்த விவரங்களை பார்த்தேன். அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை.

அவர்களது பிரிண்டர்களை கைப்பற்றி, அந்த நபர்களை ஏன் கைது செய்தனர் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அழகல்ல என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்