ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்கலாம்; பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து வருகிற 20-ந் தேதிக்குள் புகைப்பட ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.;

Update: 2023-09-16 20:51 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து வருகிற 20-ந் தேதிக்குள் புகைப்பட ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் மழை காலத்தில் ராஜகால்வாய் மூலமாக தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கடடிடங்கள் கட்டப்பட்டு இருப்பதே காரணம் ஆகும். இதையடுத்து, ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே நேரத்தில் கர்நாடக ஐகோர்ட்டும், பெங்களுருவில் ராஜகால்வாயை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களின் உதவியை மாநகராட்சி நாடி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புகைப்படம் எடுத்து அனுப்பலாம்

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ராஜகால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், அதனை புகைப்படமாக எடுத்து, ஆதாரத்துடன் மாநகராட்சிக்கு அனுப்பலாம். மேலும் புகாரும் அளிக்கலாம். தகவல்களையும் தெரிவிக்கலாம். இதற்காக மாநகராட்சியில் உள்ள 9 மண்டல என்ஜினீயர்களின் இ-மெயில்(மின்னஞ்சல்) மற்றும் செல்போன் எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

அதன்பேரில், ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து பெங்களூரு நகரவாசிகள் வருகிற 20-ந் தேதி மதியம் 2 மணிக்குள் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்