கூடுதலாக வழங்கிய ஓய்வூதிய தொகையை மூதாட்டியிடம் மாதந்தோறும் வங்கி பிடித்தம் செய்துகொள்ள வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கூடுதலாக வழங்கிய ஓய்வூதிய தொகையை மூதாட்டியிடம் மாதந்தோறும் வங்கி பிடித்தம் செய்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு நகரில் வசிப்பவர் விமலா. இவரது கணவர் பவார். இவர், ஓய்வுபெற்ற என்ஜினீயர் ஆவார். பவார் இறந்த பின்பு, அவரது மனைவியான விமலாவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மாதம் ரூ.38 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், பவார் வங்கி கணக்கு கனரா வங்கியுடன் கடந்த 2019-ம் ஆண்டு இணைக்கப்பட்டதால், தவறுதலாக விமலாவுக்கு ரூ.96,998 ஓய்வூதியம் வந்தது. இதனை விமலாவும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் விமலாவுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையில் வழக்கத்தை விட கூடுதலாக ரூ.6.40 லட்சத்தை வழங்கி இருப்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஒரே நேரத்தில் ரூ.6.40 லட்சத்தையும் பிடித்தம் செய்வதாக வங்கி அறிவித்தது. வங்கியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் விமலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது விமலாவுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை கிடைத்தது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே ஒரே நேரத்தில் அவரிடம் இருந்து ரூ.6.40 லட்சத்தை பிடித்தம் செய்தால், வாழ்க்கை நடத்த முடியாது. எனவே ரூ.6.40 லட்சத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு வங்கி பிடித்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.