'வழக்குகளின் தேக்கம் பெரும் சவால்' - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார். வழக்குகளின் தேக்கம் மிகப்பெரும் சவால் என அவர் பிரிவுபசாரத்தின் போது கருத்து தெரிவித்தார்.

Update: 2022-08-26 20:14 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். அதையொட்டி நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

எங்கள் முன் வழக்குகளின் தேக்கம், மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். வழக்குகளை பட்டியலிடுவது, வழக்குகளை ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் போதுமான கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது. அதற்காக வருந்துகிறேன். ஒவ்வொரு நாளும் அதனதன் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில் பரபரப்பாக இருந்து விட்டோம்.

வழக்குகள் தேக்க பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு, நவீன தொழில்நுட்ப கருவிகளையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த வேண்டும்.

நீதித்துறையின் தேவைகள் மற்ற துறைகளில் இருந்து மாறுபட்டதாகும். வக்கீல்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், தேவையான மாற்றங்களை கொண்டு வருவது கடினமானதாகி விடும். இளம் வக்கீல்கள் மூத்த வக்கீல்களை தங்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். மூத்த வக்கீல்கள் அவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.

கோர்ட்டுகளின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால், நீதிபதிகள் மக்களிடம் இருந்தும், சமூகத்தில் இருந்தும் மரியாதையை பெற முடியாது. மக்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் இந்த அமைப்பு என்றைக்கும் தொடரும் என்று அவர் கூறினார்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது, "தலைமை நீதிபதி ரமணா பதவிக்காலத்தில் ஐகோர்ட்டுகளில் 224 நீதிபதிகள் பணியிடங்கள், தீர்ப்பாயங்களில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் முழு அளவில் (34 நீதிபதிகள்) நீதிபதிகள் உள்ளனர். தலைமை நீதிபதியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை" என பாராட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தலைவர் விகாஸ் சிங், "தலைமை நீதிபதி ரமணாவின் ஓய்வு, நம் எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு" என குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் துஷ்யந்த் தவே பேசுகிறபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். "தலைமை நீதிபதி ரமணா, நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையே முதுகெலும்புள்ளவராக சமநிலையை பேணிப்பாதுகாத்தார்" என்றதுடன், "அவர் மக்களின் நீதிபதி" எனவும் புகழாரம் சூட்டினார். மூத்த வக்கீல் கபில் சிபல், "நீதிபதிகளின் குடும்ப நலன்களையும் பேணியவர் ரமணா" என கூறினார்.

தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடக்கிற நிகழ்ச்சியில் அவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்