போலி நகைகளை அடகு வைத்து

உப்பள்ளியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.17¾ லட்சம் மோசடி செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-12-10 18:45 GMT

உப்பள்ளி:-

நகைகளை அடகுவைத்து பணம் வாங்கினர்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூரை அடுத்த மதுரா காலனியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் கதக் மாவட்டம் அசுண்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவப்பா என்பவர் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.6¼ லட்சம் கடன் பெற்றார். இவரை போல கதக் மாவட்டம் பெடகேரியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் நகைகளை அடகு வைத்து ரூ.7½ லட்சம் கடனாக பெற்றிருந்தார்.

இதையடுத்து மஞ்சுநாத் 2-வது முறை மேலும் சில தங்க நகைகளை அடகு வைத்து ரூ.4.19 லட்சம் கடன் பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி அதிகாரிகள் அந்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது தேவப்பா மற்றும் மஞ்சுநாத் அடகு வைத்திருப்பது போலி நகை என்பது தெரியவந்தது.

ரூ.17¾ லட்சம் மோசடி

இது தொடர்பாக அவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க முயற்சித்தபோது, 2 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து வங்கி மேலாளர் ரமேஷ் என்பவர் கேஷ்வாப்பூர் போலீசில் மஞ்சுநாத், தேவப்பா ஆகியோர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.17¾ லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும், அவர்களை கைது செய்து பணத்தை மீட்டு தரும்படியும் கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் கேஷ்வாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்