பாட்னா எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு; 6 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 6 மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-23 10:42 GMT

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கான சித்தாந்தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பா.ஜனதா பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது. நாம் அன்பையும் ஒற்றுமையையும் பரப்புவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்றுகூடி இருக்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் உங்கள் மத்தியில் நான் சொல்கிறேன். வரும் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தேர்தலிலும் பா.ஜனதாவை எங்கேயும் பார்க்க முடியாது. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது.

இந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில், நாம் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறோம். ஆனால், பா.ஜனதா 2-3 தொழிலதிபர்களின் நலனுக்காகப் பாடுபடுகிறது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. கர்நாடகாவில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்