பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா ஐகோர்ட்டு உத்தரவு

65 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.;

Update: 2024-06-20 20:46 GMT

பாட்னா,

பீகாரில் அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் வற்புறுத்தி வந்தார். ஆனால், கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு சம்மதிக்கவில்லை.

இதனால், பீகார் மாநில அளவில் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வெளியிடப்பட்டன.

அதில், பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் இருப்பது தெரிய வந்தது. மற்ற சாதியினரின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், 50 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டின் அளவு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்காக இடஒதுக்கீட்டு சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, பீகார் சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததால், அவை சட்ட அந்தஸ்து பெற்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி, இடஒதுக்கீட்டின் அளவை 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீடும், பீகாரில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பீகாரில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 75 சதவீதமாக உயர்ந்தது.

இதற்கிடையே, 65 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் 10 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது, சட்டப்படி செல்லாது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்று அம்மனுக்களில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்த்தியதாக மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இடஒதுக்கீ்ட்டை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது, அரசியல் சட்டத்தின் 14, 16, 20 ஆகிய பிரிவுகள் வலியுறுத்தும் சமத்துவம், வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு போன்றவற்றுக்கு எதிரானது என்று மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த மார்ச் 11-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை ரத்து செய்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் தனிப்பட்ட உரிமை. மாநில அரசுகள் எந்தவகையான கணக்கெடுப்பையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நடத்த முடியாது. நேரடியாக நடத்த முடியாத விஷயங்களை மறைமுகமாகவும் நடத்த முடியாது.

அரசியல் சட்டத்தின் தொலைநோக்கு பார்வை, சாதியற்ற சமூகம் ஆகும். எனவே, இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு மாநில அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக கொள்ள முடியாது.

மத்திய அரசுக்கும், இந்திரா சஹானிக்கும் இடையிலான வழக்கில், இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அந்த உத்தரவுக்கு 65 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பாணை எதிரானது. மேலும், அரசியல் சட்டப்பிரிவுகளுக்கும் எதிரானது. ஆகவே, அந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்