கொல்கத்தா மருத்துவமனையில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி

கொல்கத்தா மருத்துவமனையில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-06-25 10:18 GMT



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில் சுதீர் அதிகாரி என்பவர் சிகிச்சைக்காக நோயாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், 8வது மாடியில் உள்ள தனது வார்டின் ஜன்னல் வழியே வெளியேறி கட்டிடத்தின் முனை பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அனைவரும் அந்த நபரை கீழே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் யாரையும் சுதீர் அருகே நெருங்க விடவில்லை.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்த கூடிய பெரிய ஏணி ஒன்றை கொண்டு வந்து அவரை கீழே இறக்கும் முயற்சி நடந்தது. ஆனால், ஒவ்வொரு முறை ஏணியை சுதீருக்கு அருகே கொண்டு சென்றபோது, அவர் கீழே குதிக்க முயன்றுள்ளார். சுதீரின் குடும்பத்தினர் அவரை பார்த்து அழுதுள்ளனர்.

இந்த நிலையில், மதியம் 1.10 மணியளவில் சுதீர் 8வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். அவர் தரையை அடைவதற்கு முன்பு, 2 முறை சுவரில் மோதியுள்ளார். இதில், அவரது தலை, இடுப்பு மற்றும் இடது கை பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

அவர் 8வது மாடியில் அமர்ந்து இருந்தபோது, மருத்துவமனை வெளியே பலர் திரண்டுள்ளனர். அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால், சுதீர் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சீருடை அணிந்த யாரையும் நெருங்க விடவுமில்லை. இந்நிலையில், கீழே குதித்த சுதீரின் நிலைமை மோசமடைந்து உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




Tags:    

மேலும் செய்திகள்