ஏர் இந்தியா விமானத்தின் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணிக்கு ஜாமின்

நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.

Update: 2023-01-31 12:06 GMT

டெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 'பிசினஸ்' வகுப்பில் வயதான பெண் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற ஆண் பயணி மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது அதிருப்தி மற்றும் புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விவகாரம் ஜனவரி மாத தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து பெண் பயணி புகார் அளித்தும் விமான ஊழியர்கள், விமான நிறுவனமும் சரிவர நடவடிக்கை எடுக்காதல்தால் ஏர் இந்தியா நிறுவனம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல் கொடுக்காமல், பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளாத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்ச ரூபாய் அபாராதம் விதித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் தலைமறைவாக இருந்த பயணி சங்கர் மிஸ்ராவை ஜனவரி 6-ம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆண் பயணி சங்கர் மிஸ்ரா இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி டெல்லி பாடியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு ஜாமின் வழங்கிய நிலையில் சங்கர் மிஸ்ரா இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்