ஜெய் ஸ்ரீராம் என எழுதி தேர்வில் தேர்ச்சி; 2 பேராசிரியர்கள் சஸ்பெண்டு
விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில், மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய பெயர்களை எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.;
ஜான்பூர்,
உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் நகரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பார்மசி முதல் ஆண்டு படிப்பிற்கான 18 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய கோரினார்.
இதில், சில முறைகேடுகள் நடந்திருந்தது தெரிய வந்துள்ளது. பேராசிரியர்கள் இருவர், மாணவர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு அவர்களை தேர்வில் தேர்ச்சி பெற வைத்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி பிரமாண பத்திரத்துடன் கூடிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அவற்றை உத்தர பிரதேச கவர்னருக்கும் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததும், விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில் அந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய பெயர்களை எழுதியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால், அவர்கள் தேர்வில் தேர்ச்சி அல்லது 50 சதவீத கூடுதலான மதிப்பெண்களை அவர்கள் பெற்றுள்ளனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி உடனடியாக கவர்னர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இந்த சம்பவம் பற்றி கண்காணிப்பு குழு ஒன்று வெளியில் இருந்து மதிப்பீடு செய்தபோது, சில மாணவர்களுக்கு பூஜ்யம் மற்றும் 4 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
அந்த இரு பேராசிரியர்கள் வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கவர்னரின் உத்தரவுக்காக பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது. அதன்பேரிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.