நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார் எடியூரப்பா
குருடுமலையில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை எடியூரப்பா தொடங்கினார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.;
முல்பாகல்
எடியூரப்பா
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தனிப்பெரும் பலத்துடன் கைப்பற்றியது. பா.ஜனதா கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதையடுத்து பா.ஜனதாவின் தோல்விக்கு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவை கட்சி மேலிடம் ஒதுக்கி வைத்ததே காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சி மேலிடம் எடியூரப்பாவை நேரில் அழைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதன்பேரில் எடியூரப்பா கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரசார பயணம்
அதன்படி அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை செப்டம்பர் மாதம் 17-ந் தேதி(நேற்று) கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா குருடுமலையில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அதன்படி நேற்று எடியூரப்பா குருடுமலைக்கு வந்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அவர் தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி., சதானந்தகவுடா எம்.பி., முன்னாள் மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பூஜையை முடித்துக் கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டம் குறித்து அறிவிப்பேன்
காவிரி நீர் விவகாரம், வறட்சி பகுதி மற்றும் வறட்சியை சரியாக நிர்வகிக்காதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கர்நாடக காங்கிரஸ் அரசு மீது முன்வைத்து எனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளேன்.
கர்நாடக காங்கிரஸ் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்த அரசால் ஒரு கிலோ மீட்டர் தூர சாலையை கூட சரியாக போட முடியவில்லை. மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
இதுவரை கர்நாடகம் கண்டிராத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு விவசாயிகளை மறந்துவிட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்ததும் முதலில் மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு சென்று காவிரி விவகாரம் குறித்து விவசாயிகளிடம் பேசி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பேன்.
கேக் வெட்டினேன்
பிரதமர் மோடி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி நான் இங்கு கேக் வெட்டினேன். இந்த சந்தர்ப்பத்தில் கட்சி தொண்டர்கள் மோடி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அவர்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும். மோடி 3-வது முறையாக பிரதமர் அரியணையில் அமருவார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
அரசுக்கு எதிராக போராடுவோம்
இதையடுத்து எடியூரப்பா கோலாருக்கு வந்தார். அங்கு அவர் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வறட்சி. கர்நாடக காங்கிரஸ் அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் தூக்கத்தில் இருக்கிறது.
நாங்கள் கர்நாடக அரசுக்கு எதிராக போராடுவோம். மாநில அளவிலான தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்ததும் பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
25 தொகுதிகளில் வெற்றிபெறும்
அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றிபெறும்.