நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? - வெளியான அறிவிப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 2ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமாறும் மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.