26 ஆண்டுகளாக கர்நாடக மாநில கஜானாவில் முடங்கி கிடக்கும் ஜெயலலிதாவின் பொருட்கள்-ஏலம் விடப்படுமா?

கர்நாடக மாநில கஜானாவில் 26 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-06-26 21:21 GMT

பெங்களூரு: கர்நாடக மாநில கஜானாவில் 26 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தண்டனை காலம் நிறைவு பெற்றதால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததால் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

கர்நாடக மாநில கஜானாவில்...

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதும், ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளன. 19 ஆண்டுகளாக அந்த பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கஜானாவில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ெதாடர்பாக பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான நரசிம்மமூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள்

அந்த கடிதத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் கடந்த 26 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. அந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் வளர்ச்சிக்காக செலவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநில கஜானாவில் இருக்கும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 44 குளிர்சாதன எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேசுகள், 91 கைக்கெடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் மின்விளக்குகள், 20 ஷோபா செட்டுகள்.

தங்க சாமி சிலைகள்

750 ஜோடி செருப்புகள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 215 மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம், 10 டி.வி.க்கள், 8 வி.சி.ஆர்.கள்., ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோ பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள்.

இதுதவிர தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள், தங்க வளையல்கள், கை செயின்கள், கம்மல்கள், காதுமாட்டிகள், மூக்குத்திகள், வீர வாள்கள், மயில் சிலைகள், விலை உயர்ந்த பன்னீர் சொம்பு, முருக்கு செயின்கள், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க அட்டை, தங்க தட்டு, குங்கம சிமிழ், முதுகு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட், மோதிரம், தங்க காசு மாலை, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், காமாட்சி விளக்குகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கெடிகாரம் ஆகியன உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்