பப்புவா நியூ கினியா நிலச்சரிவு - பிரதமர் மோடி இரங்கல்

பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-28 05:41 GMT

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு வசித்த பலரும் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மேலும் பாறைகள் விழுந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

"பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்