பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

Update: 2023-03-26 10:29 GMT

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்