அமாவாசைக்கு முன்பும் பின்பும் குற்றங்கள் அதிகரிப்பு...! போலீசாருக்கும்- பொதுமக்களுக்கும் உ.பி. டிஜிபி எச்சரிக்கை
மிகப்பெரிய கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள், அமாவாசையை தேர்ந்தெடுத்து குற்றங்களில் ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
லக்னோ
உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி விஜய குமார், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், அமாவாசை நாளில், குற்ற நிகழ்வுகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், அமாவாசை நாளுக்கு முன்பு, குற்றங்களைத் தடுக்க அதிக முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளார்.
பொதுவாக குற்றச்சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரம் முன்பும், அமாவாசைக்கு பின்பும் அதிகமாக நிகழும். எனவே, அதற்கேற்ப, மாதந்தோறும் அந்த நாள்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
மிகப்பெரிய கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள், அமாவாசையை தேர்ந்தெடுத்து குற்றங்களில் ஈடுபடுவார்கள்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி பவுர்ணமி. அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு இரவில் வெளிச்சம் அதிகம் இருக்கும். குற்றவாளிகள் நடமாட்டம் குறைவாக இருக்கும். ஆகஸ்ட் 16ஆம் தேதி அமாவாசை. எனவே, அதற்கு ஒரு வாரம் முன்னதாக வெளிச்சம் குறையும். அடுத்த 3 நாள்களுக்கும் வெளிச்சம் குறைவாக இருக்கும்.
எனவே, அமாவாசையை ஒட்டிய நாட்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப காவல்துறையினர் குற்றங்களைத் தடுத்தல், கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் ஈடுபடுமாறு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.
அது போல் பொதுமக்களுக்கும் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், மக்களும், அமாவாசைக்கு முன்பு ஒரு வாரமும், பின்பு ஒரு சில நாட்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.