ரூ.50 ஆயிரத்துக்கு மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம் - ரிசர்வ் வங்கி கவர்னர்

வங்கியில் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘பான்’ எண்ணை குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார்.;

Update: 2023-05-22 23:49 GMT

புதுடெல்லி,

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு, நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம்தான். நமது நாணய மேலாண்மை நடவடிக்கை மிகவும் வலுவானது.

உக்ரைன் போர், மேலைநாடுகளில் வங்கிகள் திவால் போன்ற சிக்கல்களையும் மீறி, ரூபாய் மதிப்பு வலுவாக உள்ளது.

பாதிப்பு குறைவு

கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை ஈடுகட்டவே 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மொத்த கரன்சி புழக்கத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு, வெறும் 10.8 சதவீதம்தான்.

இந்த நோட்டுகளை வாபஸ் பெறுவதால், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கருவூலத்துக்கு வந்து விடும் என்று கருதுகிறோம்.

அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் உள்ளன. ரிசர்வ் வங்கியிடம் மட்டுமின்றி, வங்கிகளின் பண அறைகளிலும் அவை உள்ளன. எனவே, கவலைப்பட தேவையில்லை.

நாள்தோறும் கண்காணிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால், ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும்.

வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும்.

இந்த பண புழக்கம், நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

1,000 ரூபாய் நோட்டு வருமா?

''1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படுமா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''இது யூகமான கேள்வி. இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை'' என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நோட்டுகளை வாபஸ் பெறுவது வழக்கமான நடவடிக்கைதான். கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட சில நோட்டுகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாபஸ் பெற்றோம்.

2,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சம் நிறைந்தவை. எனவே, கள்ள நோட்டு எதுவும் தயாரிக்கப்படவில்லை.

செப்டம்பர் 30-ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வருகிறது என்று பார்ப்போம். அதன்பிறகு அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம். வெளிநாடுகளுக்கு நீண்ட கால சுற்றுலாவில் சென்றவர்களும், பணி விசாவில் வெளிநாடு சென்றவர்களும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்