எல்லை கடந்த காதல்... இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர்
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சீமா ஹைதர் கருணை மனு அளித்துள்ளார்.;
புதுடெல்லி,
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா(23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலன் சச்சினுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சச்சினும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கடந்த ஜூலை 7-ந்தேதி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
தற்போது சீமா பாகிஸ்தான் திரும்ப விரும்பவில்லை என்றும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார். ஆனால் சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அவர் எல்லை தாண்டிய காதலரா அல்லது உளவாளியா என்பதை விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சீமா ஹைதர் கருணை மனு அளித்துள்ளார். சீமா சார்பில் இந்த கருணை மனுவை சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் ஏ.பி.சிங் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஜனாதிபதி தங்கள் விவகாரத்தை நேரடியாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் சீமா தனது நான்கு குழந்தைகளுடன் இந்தியாவில் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.