பெங்களூருவில் 600 சாலைகளில் கட்டண பார்க்கிங் வசதி
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக பெங்களூருவில் 600 சாலைகளில் கட்டண பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.;
பெங்களூரு:
பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் சாலைகளை பயன்படுத்துவது பெரிய இன்னலாக உள்ளது. குறிப்பாக சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. அதை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் பெங்களூருவின் முக்கிய சாலைகளில் கட்டண முறையில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை பெங்களூருவின் 8 மண்டலங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வசதி மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள 684 சாலைகளில் இந்த கட்டண முறையிலான பார்க்கிங் இடங்களை ஒதுக்குவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சாலை போக்குவரத்தை கருத்தில் கொண்டு கட்டண பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பெங்களூருவில் கூடுதல் பார்க்கிங் இடங்களை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோரம் அமைக்கப்படும் இந்த பார்க்கிங் வசதியால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறையும்.
இவ்வாறு கூறப்பட்டது.