பச்சிளம் குழந்தையை காப்பாற்ற சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் பெங்களூருவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்
பச்சிளம் குழந்தையை காப்பாற்றுவதற்காக தடையில்லா போக்குவரத்து மூலம் சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று பெங்களூருவை வந்தடைந்தது.
சிவமொக்கா-
பச்சிளம் குழந்தையை காப்பாற்றுவதற்காக தடையில்லா போக்குவரத்து மூலம் சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று பெங்களூருவை வந்தடைந்தது. அதை ஓட்டி வந்த டிரைவர், குழந்தையை தூக்கி வந்த நர்சுக்கு பாராட்டுகள் குவிகிறது.
பச்சிளம் குழந்தை
சிவமொக்கா(மாவட்டம்) தாலுகாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் அந்த குழந்தை சற்று சோர்வுடன் இருந்தது. இதனால் அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது.
மேலும் இந்த மருத்துவ வசதி பெங்களூருவில் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அதையடுத்து அவர்கள் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. மேலும் குழந்தையை உடனடியாக கொண்டுவருமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோரிக்கை
அதன்பேரில் சிவமொக்காவில் இருந்து அந்த குழந்தையை தனியார் ஆஸ்பத்திரி நர்சு விஜயா, மருத்துவ உதவியாளர் அனுமந்தா ஆகியோர் ஆம்புலன்சில் தூக்கிக்கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை டிரைவர் ஜெகதீஷ் ஓட்டினார். இதற்கிடையே குழந்தையின் நிலை குறித்தும், அதற்கு மருத்துவ உதவி தேவைப்படுவது குறித்தும், மேலும் தடையில்லா போக்குவரத்து (ஜீரோ போக்குவரத்து) வசதி ஏற்படுத்தி தருமாறும் சிவமொக்காவைச் சேர்ந்த மந்திரி மது பங்காரப்பாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடனடியாக அவர் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பேசி தடையில்லா போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தார். அதையடுத்து ஆம்புலன்ஸ், சிவமொக்காவில் இருந்து புறப்பட்டது.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை
அங்கு இரவு 10.10 மணியளவில் புறப்பட்ட ஆம்புலன்ஸ், நள்ளிரவு 1.40 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. சிவமொக்கா-பெங்களூரு இடையேயான 290 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 30 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் கடந்து வந்திருந்தது. குழந்தையை நர்சு விஜயா தனது கைகளிலேயே சுமந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவை வந்தடைந்ததும் உடனடியாக அந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை காப்பாற்றுவதற்காக துரிதமாக ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெகதீஷ் மற்றும் நர்சு விஜயா, மருத்துவ ஊழியர் அனுமந்தா ஆகியோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.