மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சொந்தமான சக்திதாமா ஆசிரமத்திற்கு நடிகர் விஷால் வருகை

மைசூருவில் உள்ள புனித் ராஜ்குமார் நடத்தி வந்த சக்திதாமா ஆசிரமத்திற்கு நடிகர் விஷால் வந்தார். அவர் குழந்தைகளுடன் ஆடி, பாடி மகிழ்ந்தார்.

Update: 2022-09-10 15:02 GMT

மைசூரு;

சக்தி தாமா ஆசிரமம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்ததுடன், சமூக சேவைகளும் செய்து வந்தார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மைசூருவில் சக்தி தாமா என்ற பெயரில் ஆசிரமும் புனித் ராஜ்குமார் நடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த ஆசிரமத்தை புனித் ராஜ்குமாரின் அண்ணனும், நடிகருமான சிவராஜ்குமார் கவனித்து வருகிறார்.

மேலும் புனித் ராஜ்குமாரின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் நடிகர் விஷால், சக்தி தாமா ஆசிரமத்தை கவனித்து கொள்வதாகவும், அங்குள்ள 1,800 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாகவும் அறிவித்தார். இதனால் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நடிகர் விஷால் வருகை

இந்த நிலையில் நேற்று மைசூருவில் உள்ள சக்தி தாமா ஆசிரமத்திற்கு நேற்று நடிகர் விஷால் வந்தார். மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் ஊட்டி சாலையில் உள்ள இந்த ஆசிரமத்திற்கு வந்த அவர், அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, நடனம் ஆடியும் மகிழ்ந்தார்.அங்குள்ள குழந்தைகளின் திறமையை கண்டு அவர் வியந்தார். இதையடுத்து நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


சேவகனாக இருக்க விரும்புகிறேன்

சக்தி தாமா ஆசிரமத்திற்கு நான் எப்போது சுய சேவகனாக இருக்க விரும்புகிறேன். இதற்கு ராஜ்குமார் குடும்பத்தினர் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இந்த ஆசிரமத்தை கோவில் போல் உணருகிறேன். இங்குள்ள ஒவ்வொரு குழந்தைகள் ரூபத்திலும் கடவுளை பார்க்கிறேன். குழந்தைகள் கவலைகளை மறந்து சந்ேதாசமாக ஆடி, பாடி, விளையாடி மகிழ்கிறார்கள். இதனை பார்க்கும்போது எனது மனதுக்கு இதமாக உள்ளது.

இந்த ஆசிரமத்திற்கும், இங்குள்ள குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். ராஜ்குமார் குடும்பத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்