ஷோரூமில் தீ விபத்து: 400 வாகனங்கள் எரிந்து நாசம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 வாகனங்கள் தீக்கிரையாகி சாம்பலாகின.;
விஜயவாடா,
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமிற்கு புதிதாக தயாரான 600 வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீப்பிடித்து கட்டிடம் முழுவதும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 400 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி சாம்பலாகின. சேதமான வாகனங்களின் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.