மிசோரம்: சட்டவிரோதமாக மாற்று ஊழியர்களை வேலைக்கு வைத்த 3,300 அரசு ஊழியர்கள்
கிராமப்புறங்களில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.;
ஐசால்:
மிசோரம் மாநிலத்தில், மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்வதற்கு சட்டவிரோதமாக மாற்று ஊழியர்களை பணியமர்த்துகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஜோரம் மக்களின் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இதுபோன்ற சட்டவிரோதமாக பணி செய்யும் ஊழியர்களின் விவரங்களை வழங்கும்படி முதல்-மந்திரி லால்துஹோமா உத்தரவிட்டார். அத்தகைய ஊழியர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினார். அதன்படி, மாற்று ஊழியர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்தனர்.
இதுவரை பெறப்பட்ட தகவலின்படி, 3,365 மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக மாற்று ஊழியர்களை பணியமர்த்தியிருப்பது தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இத்தகைய ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறையில் 1,115 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையில் 624 பேரும், மின்சாரத்துறையில் 253 பேரும் நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மாற்று ஊழியர்களை வேலைக்கு அமர்த்திய அரசு ஊழியர்களில், 2,070 பேர் உடல்நிலை காரணமாக இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது என்று கூறி உள்ளனர். 703 பேர் குடும்ப பிரச்சினைகளை காரணமாக கூறி உள்ளனர். குடியிருப்புகள் இல்லாதது, பணியமர்த்தப்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை மற்றும் மொழி பிரச்சினைகள் போன்றவற்றையும் சிலர் காரணமாக கூறியிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களால் பணியமர்த்தப்படும் மாற்று ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் என்று முதல்-மந்திரி லால்துஹோமா சமீபத்தில் கூறியிருந்தார்.