நிர்வாகத்தை எளிதாக்குவதற்காக 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் ரத்து - மத்திய அரசு தகவல்
நிர்வாகத்தை எளிதாக்குவதற்காக கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.;
மும்பை,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு வகையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத அல்லது தேவையற்றவை என கருதப்படும் பல சட்டங்கள் மற்றும் விதிகளை ரத்து செய்துள்ளது.
அந்தவகையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேற்படி சட்டங்கள், விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி நம்பிக்கை
நல்லாட்சியின் இறுதி நோக்கம், குடிமக்கள் வாழும் முறையை எளிதாக்குவதுதான். இதற்கு பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகள் தடைக்கல்லாக இருந்தன. இவற்றில் பல சட்டங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இவற்றை அகற்றுவதில் முந்தைய அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. அவை அனைத்தும், நிலையான அணுகுமுறையில் ஆறுதல் கண்டன.
ஆனால் பிரதமர் மோடி அத்தகைய விதிகள் மற்றும் சட்டங்களை அகற்றுவதற்கான தைரியத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதற்காக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேற்படி சட்டம் மற்றும் விதிகளை இந்த அரசு ரத்து செய்தது.
கடினமான செயல்முறை
குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற ஓரிரு மாதங்களிலேயே, சான்றிதழ்களில் அரசு அதிகாரிகள் மூலம் சான்றளிக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டது.
அதன்பிறகு ஒரு வருடத்திற்குள், பணி நியமன ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை ரத்து செய்வது பற்றி தனது செங்கோட்டை உரையில் பேசினார். ஓய்வூதிய துறையில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைப் பெறுவதற்கான கடினமான செயல்முறைக்கு செல்ல வேண்டியதில்லை.
சுகாதாரத்துறை தொழில்நுட்பம்
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பைக் கொண்டு வருவதற்காக, அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் ஆன்லைனில் மாற்றப்பட்டது. அத்துடன் மனித தலையீடும் குறைக்கப்பட்டது.
சுகாதாரத்துறையை பொறுத்தவரை தொழில்நுட்பம், கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட தொலைநிலை மருத்துவம் போன்றவற்றால் கிராமப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகளிலும் சுகாதார வசதிகள் சென்றடைந்தன.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது மட்டுமின்றி, சுகாதாரத் துறையிலும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஸ்டார்ட்அப்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கையையும் அரசு மாற்றியுள்ளது என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.