அரசு வெளி ஒப்பந்த பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு;முதல்-மந்திரி சித்தராமையா தகவல்
கர்நாடகத்தில் அரசு வெளிஒப்பந்த பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடகத்தில் அரசு வெளிஒப்பந்த பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
நல்லிணக்க சூழல்
சமதா ஆராய்ச்சி மையம் சார்பில் ஜனமன மாநாடு பெங்களூரு தேவராஜ் அர்ஸ் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலக தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் அமைதி, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் உருவாகி நமது மொத்த உற்பத்தி அதிகரிக்கிறது. அதற்கு சாதி, மதங்கள் இடையே நல்லிணக்கமான சூழல் இருக்க வேண்டும். இளம் சமுதாயத்தினரின் சக்தியை தவறாக பயன்படுத்தக்கூடாது. இத்தகைய சூழலை தடுக்க ஒரு கொள்கையை நாங்கள் வகுக்க உள்ளோம்.
தாக்குதல் நிற்காது
வேலையில்லாத இளைஞர்களுக்கு 24 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். கர்நாடக அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். அதுவரை அரசு வெளிஒப்பந்த பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம். தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கலாசார காவல் என்ற பெயரில் வன்முறைகள் நடைபெற்றன. இதை அரசு கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கலாசார காவல் வன்முறைக்கு முடிவு கட்டியுள்ளோம். சமத்துவ சமுதாயம் உருவாகாத வரை தலித், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் நிற்காது.
மாதவிடாய் கால விடுமுறை
அகாடமி, ஆணையங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஒரு குழுவை அமைக்க உள்ளோம். அதன் மூலம் மதவாத எண்ணம் கொண்டவர்கள் அவற்றுக்குள் நுழைவது தடுக்கப்படும். அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். சூத்திரர்களை போல் பெண்களும் நீண்ட காலம் கல்வி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டனர். சமூக, பொருளாதார ரீதியாக பெண்கள் பலம் அடைந்தால் ஏமாற்றுதல், தாக்குதலுக்கு உள்ளாதல் குறையும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.